யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 32 ஆண்டுகள்

யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.
யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. 1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது.
யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது. நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குழு இது தொடர்பில் இந்திய நிபுணர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணியும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்று வடிவமைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment